Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பென்டகன் விமர்சனம் குறித்து பிரதமர் மார்க் கார்னி விளக்கம்!

பென்டகன் விமர்சனம் குறித்து பிரதமர் மார்க் கார்னி விளக்கம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் கனடா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தம்மிடம் அது குறித்து எவ்விதக் கேள்விகளையும் எழுப்பவில்லை எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

பீட் ஹெக்செத் (Pete Hegseth) தலைமையிலான அமெரிக்க யுத்தத் திணைக்களம் இவ்வாரம் கனடாவைக் கடுமையாக விமர்சித்திருந்தது.

நோராட் (NORAD) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளுக்கான சர்வதேசக் கடமைகளைக் கனடா நிறைவேற்றவில்லை எனவும், தனது பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கூட்டுப் படைகளுக்கும் அமெரிக்க வரி செலுத்துவோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பென்டகன் குற்றம் சாட்டியிருந்தது.

கனடாவிடமிருந்து தாம் எதிர்பார்ப்பவை கிடைக்காவிட்டால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பென்டகன் புதிய எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்விடயம் குறித்து இன்று முதன்முறையாகப் பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்க இராணுவத்தின் முப்படைத் தளபதி அந்த நாட்டின் ஜனாதிபதியே ஆவார்” எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தைகளில், உலகெங்கிலும் உள்ள மோதல்களைத் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதாகவும், அண்மையில் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டதைப் போன்ற விடயங்களை அமெரிக்க ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கனடா தனது இராணுவத்தில் “வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடுகளை” மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டார்.

இதேவேளை, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பாதுகாப்புச் செலவினங்களைப் பன்முகப்படுத்தும் கனடாவின் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்காகவே இந்த அச்சுறுத்தல்கள் விடப்படுவதாகக் கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் (Carleton University) பாதுகாப்புத் துறை வல்லுநர் ஸ்டீபன் சைட்மேன் (Stephen Saideman) தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments