Wednesday, November 25, 2026
spot_img
Homeஉலக செய்திகள்என்விடியா நிறுவனத்திற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்ட அமெரிக்க சட்டமா அதிபர் – விசாரணை குறித்து மௌனம்!

என்விடியா நிறுவனத்திற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்ட அமெரிக்க சட்டமா அதிபர் – விசாரணை குறித்து மௌனம்!

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) நிறுவனத்தைப் பொறுப்பான பெருநிறுவனக் குடிமகன் என அமெரிக்க சட்டமா அதிபர் டொட் பிளாஞ்ச் (Todd Blanche) பாராட்டியுள்ளார்.

எனினும், குறித்த நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங்கின் (Jensen Huang) பாதுகாப்பு அனுமதி நிலை குறித்தும் தமக்கு எந்தத் தகவலும் இல்லை என பிளாஞ்ச் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு வெளியான உறவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட ஹுவாங், இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்படும் ஒருவருடனான உறவும் இதில் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹுவாங் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை அல்லது FBI விசாரணை நடத்தியுள்ளதா எனப் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிளாஞ்ச், “நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஹுவாங் அடுத்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் முன்னிலையாகவுள்ளார்.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட என்விடியாவின் வணிக வாடிக்கையாளரான மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தை வழிநடத்திய, சீன உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்படும் நபருடனான ஹுவாங்கின் தொடர்பு குறித்தும் இதன்போது கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.

இந்நிலையில், ஹுவாங் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை வெளியான நியூயோர்க் போஸ்ட் (New York Post) நேர்காணலில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “அது எப்போதும் ஒரு தெரிவாக இருக்கலாம். ஆனால், அத்தகைய நிலைமை ஏற்படும் என நான் நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments