கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களை பொருத்தும் திட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் தற்போது காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்,
அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். அதற்கு என்ன நடந்தது என்பது எமக்கு இன்னும் தெரியாது. அந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மின்சார சபை எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் கூரை மீது சூரிய மின்படலங்கள் அமைக்கப்படுகின்றன என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
அவற்றிலிருந்து பகல் வேளையிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து இரவில் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மின்சார சபை தயாராக இருக்கவில்லை.
எனவே, 2030 ஆம் ஆண்டளவில் அந்த மின்சார அளவைப் பெற்றுக்கொள்ள மின்சார சபை தயாராக இல்லாததால், அடிக்கடி மின்கட்டமைப்பு செயலிழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
ஆகவே, அந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருபுறம் பார்க்கும்போது, இதனை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் மறுபுறம் பார்த்தால், அவை கிடைக்கப் பெறாவிட்டால், நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் எதிர்வரும் ஆண்டுகளில் வறட்சியான காலப்பகுதியான பெப்ரவரி, மார்ச் மாதங்களாகும் போது கட்டாயமாக மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.
இல்லையெனில், மிகவும் அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். அப்போது அது எவ்வகையிலும் நாட்டிற்கோ, மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கோ இலாபகரமான நிலையாக அமையாது. நுகர்வோரின் மின்சாரக் கட்டணமும் சடுதியாக உயர்வடையும். பெரும்பாலும் மின்வெட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்தும் இவர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, மின்சாரத்தைச் சேமிக்கும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதே அரசாங்கம் செய்திருக்க வேண்டியதாகும்.
இதற்காக இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ‘Zero Export’ எனப்படுவதாகும். அதாவது, மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாது என்பதாகும். அது பழைய ‘Net Metering’ முறையைப் போன்றதுதான். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், கொள்வனவு செய்யப்படும் மின்சாரமும் விற்கப்படும் மின்சாரமும் ஈடுசெய்யப்பட மாட்டாது.
எனவே நடைமுறையில் அந்த முறைக்குச் செல்லும்போது, முன்னர் மின்சார சபை ஒரு சேமிப்பகமாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது இல்லை. மின்நிலையம் அல்லது கூரையில் சூரிய மின்சக்திப் பலகையைப் பொருத்துவதற்கு மேலதிகமாக, மின்கலத்திற்கும் (Battery) மேலதிக செலவைச் செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.


