கனடாவின் மொன்றியல் நகரில் பொலிஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்ட இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொன்றியல் நகர பொலிஸ் சேவையான SPVM, நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குற்றவியல் வழக்குத் தொடரல் பணிப்பாளர் திணைக்களத்தினால் (DPCP) வெளியிடப்பட்ட கைது உத்தரவின்படி, முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான 24 வயதுடைய வின்சென்ட் ரூதியர் மற்றும் 25 வயதுடைய சக்கரி பெல்சில் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் எதிராக தாக்குதல் மற்றும் நம்பிக்கைத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், சக்கரி பெல்சிலுக்கு எதிராக குற்றவியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த நவம்பர் 2ஆம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்ட ஏழு பொலிஸ் அதிகாரிகளிலும் உள்ளடங்குகின்றனர்.
அவர்களில் இருவர் பொலிஸ் நிலையம் 21 இலிருந்தும், ஐவர் பொலிஸ் நிலையம் 39 இலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மொன்றியல் பொலிஸ் பிரதானி ஃபாடி டாகர் தெரிவித்துள்ளார்.


