மெக்சிகோவின் குவாதலஹாரா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலின் ‘God father’ மற்றும் தலைவர்களின் தலைவர் என அழைக்கப்பட்ட இவர், 1980களில் மெக்சிகோவின் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குவாதலஹாரா கடத்தல் குழுவின் தலைவராகச் செயற்பட்டார்.
கொலம்பியாவில் பப்லோ எஸ்கோபாரின் தலைமையிலான மெடலின் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை மெக்சிகோ ஊடாக அமெரிக்காவுக்குக் கடத்தும் வலையமைப்பை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
அந்தக் காலப்பகுதியில் அமெரிக்காவுக்குள் கடத்தப்பட்ட கொக்கைன் போதைப்பொருளில் சுமார் 80 வீதம் மெடலின் குழுவிடமிருந்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமுலாக்கப் பிரிவின் (DEA) அதிகாரியான என்ரிக் ‘கிக்கி’ கெமரேனா கடத்தப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லார்டோவுக்கு எதிராகப் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, 1989ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதன் பின்னர் அரச காவலில் இருந்து வந்தார்.
பின்னர் உலகப் புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரராக உருவெடுத்த ‘எல் சாப்போ’ (El Chapo) என அழைக்கப்படும் ஜோக்வின் குஸ்மானும், கல்லார்டோவின் அமைப்பின் கீழ் பணியாற்றியவர்களில் ஒருவராவார்.
கல்லார்டோ கைது செய்யப்பட்ட பின்னர் அவரது அமைப்பு சிதைவடைந்ததுடன், குஸ்மானின் தலைமையில் சினலோவா போதைப்பொருள் கடத்தல் அமைப்பு உருவானது.
இதேவேளை, கல்லார்டோவின் வாழ்க்கை வரலாறு, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சித் தொடரான ‘Narcos: Mexico’ ஊடாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


