Tuesday, November 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்விமான நிலையங்களில் அதிர்ச்சித் தந்திரம் அம்பலம்

விமான நிலையங்களில் அதிர்ச்சித் தந்திரம் அம்பலம்

ஒரு சாதாரணப் பயணம் எவ்வாறு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத துயரமாக மாறுகிறது? விமானப் பயணிகளின் பயணப் பொதிகளைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மோசடி தொடர்பான அதிர்ச்சித் தகவல்களை கனடாவின் W5 ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

CTV News இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள W5 ஊடகத்தின் ஐந்து பாக விசாரணைத் தொடரின் இறுதிப் பாகத்தில், இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பயணிகளின் அனுபவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக விமான நிலைய ஊழியர்கள் பயணிகளின் பொதிகளைத் தொலைத்துவிடுவது அல்லது சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களே அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், இதைவிட ஆபத்தான மோசடி ஒன்று இடம்பெறுவதாக W5 விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது, விமான நிலையங்களில் பணியாற்றும் சில ஊழல் ஊழியர்கள், பயணிகளின் பொதிகளில் ஒட்டப்பட்டுள்ள அடையாளக் குறிச்சொற்களை (Baggage Tags) அகற்றி, போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறு பொதிகளில் அவற்றை ஒட்டுகின்றனர்.

இதன் மூலம், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட பொதிகள் அப்பாவிப் பயணிகளின் பெயர்களில் சர்வதேச எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த வகையான ‘Bag Tag Switching’ எனப்படும் மோசடி தொடர்பில் 24க்கும் மேற்பட்ட சம்பவங்களை W5 அடையாளம் கண்டுள்ளது.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட சில கனேடியர்கள், தங்களுக்குச் சொந்தமில்லாத பொதிகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிறைத்தண்டனையையும் அனுபவித்துள்ளனர்.

அங்கு பொலிஸார், “அது எனது பொதியல்ல” என்ற பயணிகளின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாத சூழலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கனடாவின் மத்திய போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். W5 வெளியிட்ட முந்தைய விசாரணையைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்து புதிய தீர்வுகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சட்டமூலங்கள் அல்லது புதிய சட்ட ஏற்பாடுகளை விடவும் குறைந்த செலவிலும் எளிதாகவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என கனேடியர் ஒருவர் முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, எவராலும் மாற்றவோ அகற்றவோ முடியாத வகையிலான பயணப் பொதிகளுக்கான அடையாளக் குறிச்சொல்லை அறிமுகப்படுத்துவதே அவரது யோசனையாகும்.

இந்த மோசடி சர்வதேச விமானப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments