Tuesday, November 17, 2026
spot_img
Homeபொது செய்திகள்SpaceX ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது

SpaceX ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம், விண்வெளியில் தனது மிக நீண்ட பயணத்தை நிறைவு செய்த பின்னர், கடந்த சனிக்கிழமை அது ஏவப்பட்ட ஏவுதளக் கோபுரத்திற்கே வெற்றிகரமாகத் திரும்பியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஏவுதளத்தில், விண்கலம் கீழிறங்கி, கோபுரத்தின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரமயமான ‘சாப்ஸ்டிக்’ எனப்படும் பிடிப்புக் கரங்களுக்குள் எவ்வித சிக்கலுமின்றி நிலைநிறுத்தப்பட்டது.

முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் அமைப்பை உருவாக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமார் பத்தாண்டுகால முயற்சியில், விண்கலத்தின் முக்கியப் பகுதியை வெற்றிகரமாக மீட்டெடுத்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இதன்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பு வர்ணனையாளர் டான் ஹூட், “இதை உங்களால் நம்ப முடிகிறதா? பாருங்கள்! விண்கலம் மீண்டும் வந்துவிட்டது!” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஸ்டார்ஷிப் முக்கிய மைல்கல்லை எட்டியது

உலகின் மிகப்பெரியதும் சக்திவாய்ந்ததுமான ரொக்கெட் அமைப்பின் 15ஆவது சோதனைப் பயணமாக இது அமைந்தது.

இந்தப் பயணத்தின்போது ஸ்டார்ஷிப் விண்கலம் பூமியை 14 தடவைகள் சுற்றி, 22 மணித்தியாலங்களுக்கும் மேலாக விண்வெளியில் பயணித்துள்ளது. இதன்போது 26 ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

பல பில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் ஸ்டார்ஷிப் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த வெற்றிகரமான மீள்வருகை கருதப்படுகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், மனிதர்களை நிலவுக்கும் எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கும் அனுப்புவதற்கும் இந்த விண்கலம் முக்கியமானது என அதன் நிறுவனர் எலோன் மஸ்க் கருதுகிறார்.

இந்த வெற்றியை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் வரவேற்றுள்ளது. இந்தத் தசாப்தத்தின் பிற்பகுதியில் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதற்கும், அங்கு நிரந்தரத் தளமொன்றை அமைப்பதற்கும் ஸ்டார்ஷிப் விண்கலத்தைப் பயன்படுத்த நாசா பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகிறது.

“இது கிட்டத்தட்ட ஒரு மாயாஜாலம் போன்றது” என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரொக்கெட்டின் கீழ்ப்பகுதி செயலிழப்பு குறித்து விசாரணை

இதற்கிடையில், ரொக்கெட்டின் கீழ்ப்பகுதியான ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ பகுதியையும் மீட்டெடுக்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

எனினும், அந்தப் பகுதியை மீட்டெடுக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மெக்சிகோ வளைகுடாவுக்கு மேலாக அது வெடித்துச் சிதறியுள்ளது.

சூப்பர் ஹெவி பூஸ்டரின் இயந்திரங்கள் திட்டமிட்டதைவிட முன்னதாகவே இயங்குவதை நிறுத்தியதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கேட் டைஸ் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் சரியான நிலையில் இல்லை என்பதை அதன் வழிகாட்டல் கட்டமைப்பு கண்டறிந்ததைத் தொடர்ந்து, தன்னைத்தானே அழிக்கும் பாதுகாப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயலிழப்புக்கான காரணம் குறித்து பொறியியலாளர்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற மூன்று சோதனைப் பயணங்களின்போது சூப்பர் ஹெவி பூஸ்டரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகப் பிடித்து மீட்டிருந்தது.

விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைப்பதற்காக முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் அமைப்பை உருவாக்குவதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய இலக்காகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments