கனடாவின் டொராண்டோவில் மைக்ரோசொஃப்ட் (Microsoft) சேவைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பல முக்கிய நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, செயின்ட் மைக்கேல் மருத்துவமனையை உள்ளடக்கிய யூனிட்டி ஹெல்த் டொராண்டோ (Unity Health Toronto) மருத்துவமனை வலையமைப்பு, மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசரகால ‘Code Grey’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் மருத்துவமனை ஊழியர்களால் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் நோயாளர்களுக்கான சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வொர்க் (UHN), சன்னிபுரூக் மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
டொராண்டோ நகர சபை (City Hall) மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம், செனெகா பொலிடெக்னிக், ஜோர்ஜ் பிரவுன் பொலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, ரயில் பயணிகள் தங்களது பயணம் தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என VIA Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்தது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


