கனடாவின் வைன்ரைட் ராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எட்மண்டன் நகரின் வீதிகளில் 14 வயதுடைய லியாம் ஹெர்மன் என்ற சிறுவன் நிதி திரட்டும் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப் பொழுதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, அதிகாலை 3:00 மணிக்கே அச்சிறுவன் தனது நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கால் விரல்கள் உறைந்து போகும் அளவுக்குக் கடும் குளிர் நிலவுகிறது. எனினும் எனது இலக்கில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று லியாம் ஹெர்மன் தெரிவித்துள்ளார்.
வைன்ரைட் ராணுவ முகாமில் நடந்த தீ விபத்து குறித்துக் கேள்வியுற்றபோது அது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக சிறுவன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உயிர் பிழைத்தோரின் நலனுக்காக 200 கிலோமீட்டர் தூரம் (எட்மண்டனிலிருந்து சஸ்காட்செவன் எல்லை வரையிலான தூரத்திற்குச் சமமான) நடைபயணம் மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளார்.
தமக்கு குறிப்பிட்ட பாதை என்று எதுவும் இல்லை; எனது காலக்கெடு முடியும் வரை நான் நடப்பேன் எனவும் முதல் நாளில் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை நடந்து முடித்துவிட்டு, வரும் புதன்கிழமை வரை தினமும் 32.5 கிலோமீட்டர் தூரம் நடக்கத் திட்டமிட்டுள்ளேன்” என சிறுவன் தெரிவித்துள்ளார்.


