கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் கடுமையான குற்றப் பின்னணி கொண்ட பாலியல் குற்றவாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை விடுதலையாவதை முன்னிட்டு, அங்குள்ள காவல்துறை சனிக்கிழமையன்று அவசர சமூகப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாற்பத்தெட்டு வயதான கீத் தியோடர் கான்ஸ்டன்டின் என்ற அந்த நபர், சமூகத்திற்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியவர் என்று புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர் இதற்கு முன்னர் ஆயுதமேந்திய பாலியல் தாக்குதல், கொள்ளை, வெடிபொருட்கள் வைத்திருத்தல், மிரட்டல் விடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பல தீவிர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் ஆவார்.
மேலும், கடந்த 2025 மார்ச் மாதம் உட்பட பல முறை நன்னடத்தை விதிமுறைகளை மீறிய வரலாறும் இவருக்கு உள்ளது. இதன் காரணமாக அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
விடுதலையாகும் நிபந்தனைகளின்படி, அவர் தனது உடலில் எப்போதும் GPS கண்காணிப்பு கருவியை அணிந்திருக்க வேண்டும் மற்றும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் வாரந்தோறும் டர்ஹாம் பிராந்திய காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


