தென் மற்றும் மத்திய அமெரிக்க பிராந்தியங்களை பதற்றத்தில் ஆழ்த்தும் வகையில் பனாமாவில் 7.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று (ஒக்டோபர் 9) இரவு பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா உட்பட பல அண்டை நாடுகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் (USGS) தகவல்படி, பனாமா நகரத்திலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், 12.6 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால், பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
பெனொனோம் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் பகுதி இடிந்து விழுந்தது உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 6 மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகளோ, கடுமையான காயங்களோ பதிவாகவில்லை.
இந்த அசாதாரண சூழ்நிலையால் பனாமாவுக்கு மட்டுமன்றி கொலம்பியா, ஈக்வடார், நிகரகுவா, கோஸ்டாரிக்கா மற்றும் குவாத்தமாலா ஆகிய அண்டை நாடுகளுக்கும் சுனாமி அபாயம் பரவியுள்ளது.
மையமிட்ட பகுதியில் சுமார் 43,000 பேர் மட்டுமே வசித்து வந்ததால், ஆயிரக்கணக்கான உயிர்பலிகள் தவிர்க்கப்பட்டு பெருஞ்சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


