Wednesday, September 23, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேசியாவில் புகைமூட்டம்: 1.7 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு சுவாசப் பாதிப்பு!

இந்தோனேசியாவில் புகைமூட்டம்: 1.7 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு சுவாசப் பாதிப்பு!

இந்தோனேசியாவில் காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான புகைமூட்டத்தால், ஆகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 174,694 பேருக்கு தீவிர சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஏழு மாகாணங்களில் பதிவான இந்த எண்ணிக்கை, செப்டெம்பர் 9ஆம் திகதி நிலவரப்படி 113,000 ஆக இருந்த நிலையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

பதிவான நோயாளிகளில் 40,000க்கும் அதிகமானோர் சிறு குழந்தைகள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போர்னியோ, சுமாத்திரா மற்றும் பப்புவா பகுதிகளில் பரவலாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் உருவாகும் புகையில் PM2.5 உள்ளிட்ட நுண்துகள்கள் அதிகளவில் காணப்படுவதால், சுவாசத் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையை சமாளிப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. புகைமூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவும், முகக்கவசம் அணியவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் ஜூலை முதல் ஒக்டோபர் வரையான வறட்சிக் காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு நிலைமை தீவிரமடைந்துள்ளது. வலுவான எல் நினோ காலநிலை நிலை, நீடித்த வறட்சி, வன அழிப்பு மற்றும் நிலத்தை தீவைத்து சுத்தப்படுத்தும் நடைமுறைகள் ஆகியவை தீ பரவலுக்கு காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்த புகைமூட்டம் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரையும் பாதித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments