பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி முளங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த 17 வயது சிறுவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் மீட்டுள்ளனர்.
இந்தியாவில் பள்ளிக் கல்வியை இடைநிறுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்தச் சிறுவனுக்கு, பேஸ்புக் ஊடாக கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமியுடன் காதல் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலியை சந்திக்க இலங்கை வருவதற்கு பணம் இல்லாத நிலையில், தாம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் கட்டணமாக வழங்கி சட்டவிரோத படகில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அழைத்து வந்த படகோட்டி, சிறுவனை மன்னார் ஆதாமின் பாலம் பகுதியில் உள்ள 6ஆம் மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு மீண்டும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
செப்டம்பர் 11ஆம் திகதி மாலை கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மணல் திட்டில் தனியாக நின்ற சிறுவனை அவதானித்து சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் அவனை மீட்டு விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


