Saturday, June 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான மீளாய்வு

யாழில் படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான மீளாய்வு

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் 24 ஜூன் அன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

காணி தொடர்பான விவகாரங்கள் குறித்த முந்தைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

இதன்போது, காணி உரிமை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துதல், சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் பிராந்திய நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

இந்நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கும் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் முக்கியமானவை என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தின் போது, எல்லை மறுசீரமைப்புகளை இறுதிப்படுத்துதல், இழப்பீடு வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் உரிய உரிமையாளர்களுக்கு மீளளிக்கப்பட வேண்டிய காணித் துண்டுகளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதேசத்தில் பல முக்கிய இடங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது பெற்ற அனுபவங்களையும் அவதானிப்புகளையும் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாக அவர் கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது , சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிலவும் சவால்களைப் பற்றி கலந்துரையாடி, அனைத்து நிறுவனங்களுக்கும் இடையிலான பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியவாறு செயற்பாடுகளை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளை அடையாளம் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

இதனுடன், உரிய காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புச் சபையின் (National Security Council  -NSC) இறுதி அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படும் எனவும் இணக்கம் எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments