யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாகச் செயலற்றுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணி, இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரின் எரிவாயுவில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த இராணுவத்தினரின் தங்குமிட பகுதியும் தீயினால் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர், இராணுவத்தினருடன் இணைந்து தீயை மேலும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


