Wednesday, June 24, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மியான்மாரின் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறைவைப்பு!

மியான்மாரின் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறைவைப்பு!

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

 

ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் இன்னும் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த நிலைமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சிவில் சமூக வலைப்பின்னல் அமைப்பு தாய்லாந்து பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளது.

 

மியான்மார் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மதிப்பீடுகளின்படி அங்குள்ளவர்களில் சுமார் 1,600 சீனர்களும், சுமார் 200 மியான்மார் குடிகளும், 20 தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவதுடன் பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, பிரேசில், ரஷ்யா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மியான்மார் மற்றும் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இயங்கி வரும் இந்த குற்றவியல் நெட்வொர்க்குகள், இணையம் மூலம் மக்களை ஏமாற்றி ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகிறது.

 

மனித கடத்தல் மூலம் இந்த மையங்களுக்கு அழைத்து வரப்படும் வெளிநாட்டவர்கள், வலுக்கட்டாயமாகவும் கடுமையான அழுத்தங்களின் கீழும் நிதி மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த ஆண்டு தாய்லாந்தின் தலையீட்டுடன் மியான்மாரின் மியாவாடி பகுதியில் இருந்து சுமார் 5,000 பேர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.கே.பி.ஏ ஆயுதக் குழுவோ அல்லது மியான்மார் இராணுவ ஆட்சியின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர்களோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments