பிரித்தானியப் பிரதமர் மற்றும் தொழிற்கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து தாம் விலகப் போவதாக கெய்ர் ஸ்டார்மர் Keir Starmer உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று (22) காலை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட்டில் கருத்து வெளியிட்ட கெய்ர் ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
பதவியிலிருந்து விலகும் தமது முடிவு குறித்து மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு முறைப்படி அறிவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, தாங்கள் பொறுப்பேற்ற போது தொழிற் கட்சி அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது என ஸ்டார்மர் கூறினார்.
தமக்குத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்சி இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டதாகவும், ஆனால் அவர்களைத் தாம் தவறென நிரூபித்துக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற் கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழுவிடம், தலைமைத்துவத்திற்கான வேட்புமனுக்களை ஜூலை 9 ஆம் திகதி திறந்து, கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அவற்றை முடித்துவிடுமாறும் ஒரு கால அட்டவணையைத் தயாரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம், செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது, புதிய தலைவர் பதவியேற்றிருப்பார்.
அதுவரை தாம் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


