நாட்டை அச்சுறுத்தி வரும் டெங்கு நோயிலிருந்து பொதுமக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு, அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுமக்களாகிய நாமே டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுக்கள் பெருகுவதற்கான சூழலை உருவாக்கி, அவற்றுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றோம். எனவே, சுயநலமின்றி தங்களைப் பற்றியும், தங்களது குடும்பத்தினர், அண்டை வீட்டார் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நமது பார்வைக்கு புலப்படும் இடங்களை மட்டுமின்றி, எளிதில் கண்ணில் படாத மறைவான இடங்களிலும் டெங்கு கொசுக்கள் பெருகக்கூடும் என்பதால், அவ்வாறான இடங்களை உன்னிப்பாகக் கவனித்துச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகக்கூடிய வகையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து இடங்களையும் கண்டறிந்து, நீரை முழுமையாக அகற்றி துப்புரவு செய்ய வேண்டும் அல்லது அத்தகைய பொருள்களை முற்றாக அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு நோயைப் பொறுத்தவரை, நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, அது பரவாமல் முன்கூட்டியே தடுப்பதே மிகச் சிறந்த வழியாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமடையும் போது ‘டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல்’ அல்லது ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ ஏற்பட்டு, முறையான மருத்துவ நடவடிக்கைகள் இல்லாவிடில் இந்நோய் சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயகரமான ஒன்றாக மாறக்கூடும்.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்த்து, டெங்கு நோய் பரவலைக் குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, தத்தமது சூழலைத் தூய்மையாகப் பேண பங்களிப்பு வழங்க வேண்டும்.” – என்று மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.


