பெப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையின் (T20 World Cup) மிக முக்கியமான இந்தியா – பாகிஸ்தான் மோதலைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த முடிவை மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board [PCB]) முன்வைத்த ஐந்து நிபந்தனைகளில் மூன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council [ICC]) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இதனால் திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
லாகூரில் நடந்த 5 மணிநேர மாரத்தான் பேச்சுவார்த்தை
பாகிஸ்தானின் பிடிவாதமான போக்கைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை லாகூரில் ஐந்தரை மணி நேரம் நீண்ட உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) மற்றும் ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் பங்கேற்றனர்.
குறிப்பாக, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக, வங்கதேச அணி இந்தியாவுக்குச் செல்ல மறுத்தபோது, அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே.
பாகிஸ்தான் முன்வைத்த 5 நிபந்தனைகள்: ஐசிசியின் பதில்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடத் தனது அணிக்கு அனுமதி வழங்க, பாகிஸ்தான் அரசு ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது:
-
வங்கதேசத்திற்கு இழப்பீடு: உலகக்கோப்பையிலிருந்து விலகியதற்காக வங்கதேசத்திற்கு அபராதம் விதிக்கக்கூடாது (இது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டது).
-
ஈடுசெய்யும் தொடர்: மகளிர் உலகக்கோப்பை மாற்றப்பட்டதற்கு ஈடாக வங்கதேசத்திற்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வழங்க வேண்டும்.
-
இருதரப்பு தொடர் (Bilateral Series): இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளைத் தொடங்க ஐசிசி வழிவகை செய்ய வேண்டும் (நிராகரிக்கப்பட்டது).
-
முத்தரப்பு தொடர் (Tri-series): இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் தொடரை நடத்த வேண்டும் (நிராகரிக்கப்பட்டது).
-
இந்தியா வங்கதேசம் வர வேண்டும்: ஒத்திவைக்கப்பட்ட தொடருக்காக இந்திய அணி வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டும் (நிராகரிக்கப்பட்டது).
இந்தியா சம்பந்தப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்த ஐசிசி, இருதரப்புப் போட்டிகள் என்பது அந்தந்த நாட்டு வாரியங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது (Jurisdiction) என்றும், அதில் ஐசிசி தலையிட முடியாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டது.
பிரதமரின் முடிவுக்காகக் காத்திருக்கும் ஐசிசி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்நாட்டமைச்சராகவும் இருக்கிறார்.
எனவே, இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் ஆலோசித்து இறுதி முடிவை அறிவிக்க அவருக்கு ஒரு நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
திங்கள் மாலை அல்லது செவ்வாய் காலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு: ஐசிசி நெறிமுறையே இறுதி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India [BCCI]) இதுகுறித்து அமைதி காத்தாலும், ஐசிசி நெறிமுறைகளை (Protocol) மிகச் சரியாகப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது.
இந்திய அணி வழக்கம்போல இலங்கைக்குப் பயணம் செய்து, பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை மேற்கொள்ளும்.
போட்டி நாளன்று மைதானத்திற்குச் சென்று பாகிஸ்தான் வருகைக்காகக் காத்திருக்கும். பாகிஸ்தான் வராவிட்டால், விதிமுறைப்படி இந்தியாவின் வெற்றி அறிவிக்கப்படும்.
2,200 கோடி ரூபாய் வருவாய் பாதிப்பு: யாருக்கு நஷ்டம்?
இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்பது உலக கிரிக்கெட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித் தரும் ஒரு பொன் முட்டையிடும் வாத்து போன்றது.
-
வருவாய் இழப்பு: இப்போட்டி ரத்தானால் சுமார் 2,200 கோடி ரூபாய் வருவாய் பாதிக்கப்படும்.
-
விளம்பரங்கள்: ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சுமார் 250 கோடி ரூபாய் வரை விளம்பர வருவாய் இழப்பு ஏற்படும். இதில் 10 வினாடி விளம்பர ஸ்லாட் (Commercial Slot) ஒன்றின் விலை 40 லட்சம் ரூபாயாகும்.
-
பாகிஸ்தானின் நிதிச் சிக்கல்: போட்டியைப் புறக்கணித்தால் ஐசிசியிடமிருந்து கிடைக்கும் மில்லியன் கணக்கான டாலர்களைப் பாகிஸ்தான் இழக்கும். இது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பேரிடியாக அமையும்.


