கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற தென் பெண்ணையாற்றுத் திருவிழாவில், பலூன் நிரப்பப் பயன்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இந்த துயரச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘X’ பதிவில்:
“மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தீவிர விசாரணை: தடயவியல் குழு வருகை
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். தற்போது காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிழா கோலத்தில் நேர்ந்த சோகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஐந்தாம் நாள் ஆற்றுத்திருவிழா கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையொட்டி, தென் பெண்ணையாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து ஊர்வலங்கள் வந்தன. லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில், இந்த எதிர்பாராத சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


