இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடிப்பு
அதிரடியாக விளையாடிய கோலி, 91 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (7 சதங்கள்) விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்னர் ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் தலா 6 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களை முறியடித்து கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தலா 5 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
அனைத்து வடிவங்களிலும் முதலிடம்
ஒருநாள் போட்டிகள் மட்டுமன்றி, அனைத்து சர்வதேசப் போட்டிகளையும் (Test, ODI, T20) கணக்கில் கொண்டால், நியூசிலாந்துக்கு எதிராக 10 சதங்களை விளாசி கோலி முதலிடத்தில் உள்ளார். ஜாக் காலிஸ், ஜோ ரூட் மற்றும் சச்சின் ஆகியோர் 9 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
போராடித் தோற்ற இந்திய அணி
நியூசிலாந்து நிர்ணயித்த 338 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 296 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. விராட் கோலி 124 ஓட்டங்களையும், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அரைசதங்களையும் கடந்த போதிலும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. முன்னதாக நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகியோர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.


