Sunday, June 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்சீனாவில் மார்க் கார்னி: கனடா விவசாயிகளுக்காக வர்த்தகப் போர் முடிகிறது!

சீனாவில் மார்க் கார்னி: கனடா விவசாயிகளுக்காக வர்த்தகப் போர் முடிகிறது!

கனடா மற்றும் சீனா இடையிலான நீண்டகால கசப்பான வர்த்தகப் போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் நேற்று (ஜனவரி 16) சந்தித்தபோது, இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்திருந்த வர்த்தகத் தடைகளைத் தளர்த்திக் கொள்ள ஒப்புக்கொண்டன. 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடா பிரதமர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கனடாவின் கார்னோலா (Canola) விதைகள், நண்டு மற்றும் பட்டாணி போன்ற விவசாயப் பொருட்களுக்கு சீனா விதித்திருந்த கடுமையான வர்த்தக வரி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளது. குறிப்பாக 85 சதவீதமாக இருந்த வரி இனி 15 சதவீதமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் கனடியத் தொழிலாளர்களுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் மீண்டும் பிரகாசமாகியுள்ளன.

மறுபுறம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு (Electric Vehicles) கனடா விதித்திருந்த 100 சதவீத வரியைத் தளர்த்த முன்வந்துள்ளது. முதற்கட்டமாக 49,000 வாகனங்களை குறைந்த வரி விகிதத்தில் இறக்குமதி செய்ய பிரதமர் மார்க் கார்னி அனுமதி அளித்துள்ளார். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில், தனது நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.

கனடாவின் ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க கனடா தற்போது சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. “பழைய கசப்புகளை மறந்து, புதிய உலக யதார்த்தத்திற்கு ஏற்ப நாம் இணைந்து செயல்பட வேண்டும்” என அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கார்னி வலியுறுத்தினார்.

இருப்பினும், பாதுகாப்பு விவகாரங்களில் கனடா தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடாகவே நீடிக்கும் என்றும், இந்த உறவு வெறும் பொருளாதார மேம்பாட்டிற்கானது மட்டுமே என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments