சர்வதேச பெட்மிண்டன் அரங்கின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றானது ‘இந்தியா ஓபன்’ (India Open Super 750) பெட்மிண்டன் தொடர்.
இன்று இது புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான BWF உலகத் தொடரின் இரண்டாவது பிரதான சுற்றுப்போட்டியான இதில், உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
இந்தியத் தரப்பில் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து இந்திய அணியை வழிநடத்துகிறார்.
தற்போது தரவரிசையில் 18ஆவது இடத்திலுள்ள சிந்து, 2025ஆம் ஆண்டு எதிர்கொண்ட உபாதைகள் மற்றும் சவால்களுக்குப் பின்னர் மீண்டும் களமிறங்குகிறார்.
அண்மையில் நடைபெற்ற மலேசிய ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய அவர், சொந்த மண்ணில் அந்த வெற்றியைத் தக்கவைக்க முனைப்புடன் உள்ளார்.
இவருடன் மாளவிகா பன்சோத் மற்றும் இளம் வீராங்கனை தன்வி சர்மா ஆகியோரும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் போட்டியிடுகின்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் திரீசா ஜொலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை இந்திய சவாலுக்குத் தலைமை தாங்குகின்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆரம்ப சுற்றிலேயே இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர். இதனால் இவர்களில் ஒருவர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இவர்களுடன் முன்னாள் உலக சம்பியன்ஷிப் பதக்க வெற்றியாளர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில், உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்திலுள்ள சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை, தாம் 2022 இல் வென்ற கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் களம் காண்கின்றனர். எம்.ஆர். அர்ஜுன் மற்றும் ஹரிஹரன் அம்சா கருணன் இணையும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஜோடியான தனிஷா கிராஸ்டோ மற்றும் துருவ் கபிலா முதன்மை இணையாகப் போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இதே மைதானத்தில் BWF உலக சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளத் தன்மையை (Conditions) நன்கு அறிந்து கொள்வதற்கு இந்த இந்தியா ஓபன் தொடர் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.


