மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சீனிகம பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், அக்காலப்பகுதி மக்களுக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்கள் மீது தாங்க முடியாத வரிச் சுமைகளைச் சுமத்தியுள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.
பல குடும்பங்கள் புத்தாண்டு காலத்தில் தற்காலிக முகாம்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்களின் எதிர்காலம் மற்றும் வீடுகள் குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதிகள் இன்னும் முறையாக நிறைவேற்றப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் வீடுகளில் குடியமர்த்துவதற்கும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் விடயங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாவிட்டாலும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் தமது பொறுப்புகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றப் போவதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


