75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஈழத்தின் உறுதியான தனித்துவம் மிக்க பேராளுமையான கலாபூசணம் திருமதி கோகிலா மகேந்திரனின் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணிக்கு இராமநாதன் வீதி (ராஜா கிறீம் ஹவுஸ்) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் பவளவிழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
ஆசிரியராக, எழுத்தாளராக, உளவள ஆலோசகராக, நாடகவியலாளராக, சமூக ஆர்வலராக பன்முகத்தன்மை கொண்ட அவர் தொடர்ந்தும் சமூக மாற்றத்துக்காக இயங்கி வருகிறார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை விழிசிட்டியில் 1950 ஆம் ஆண்டில் சிவசுப்பிரமணியம், செல்லமுத்து தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார்.
பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் (விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை) ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் உயிரியல் துறையில் உயர் கல்வியைக் கற்றார்.
1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து, 1994 இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி, 1999 இல் வலிகாமம் கல்விவலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளராகினார்.
1976 இல் கிருஸ்ணர் மகேந்திரராஜாவை திருமணம் செய்து கொண்டார். அவர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் அதிபராக விளங்கியவர். இவர்களது ஒரே மகனான பிரவீணன் இப்போது அவுஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் நிறுவனராக இருந்து அதனூடாக உளவியல்சார் வகுப்புகளை தொடர்ந்து நடாத்தி வருகிறார். சிறுகதை, கவிதை, ஓவியம், பண்ணிசை, நகைச்சுவை கூறுதல், நற்சிந்தனை (பாடசாலையில் காலை பேச்சு), நாடகம் என தன்னிடம் கற்கும் மாணவர்களை பலதுறைகளில் புடம்போடுவதில் வல்லவர். கற்கைநெறியின் முடிவில் பல்துறைசார் கலைநிகழ்வுகளையும், பரிசளிப்பு விழாக்களையும், மாணவர் ஊக்குவிப்புப் புலமைப் பரிசில்களையும், முன்மாதிரி மூத்தோர்களை அழைத்துக் கௌரவிப்புக்களையும் தொடர்ந்தும் செய்து வருகிறார்.
இந்த வயதிலும் தொடர்ந்து கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல், சோலைக்குயில் மாணவர்களுக்கு கற்பித்தல், புத்தகங்களை எழுதுதல், நாடகங்கள் பயிற்றுவித்தல், ஆங்கில இலக்கியம் படிப்பித்தல், உளநல ஆலோசனைகள் வழங்கல் என தொடர்ந்தும் துடிப்பாக இயங்கி வருகிறார்.
இன்று ஈழத்தில் வாழும் நன்கு அனுபவமான மூத்த உளவியல் ஆலோசகர்களின் ஒருவராக இவரைக் குறிப்பிடலாம். குறிப்பாக போர் நெருக்கடியை சந்தித்து மீண்ட பலருக்கு உளவளத்துணை ஆலோசனைகளை தொடர்ந்தும் வழங்கி உளநெருக்கடியிருந்தும் மீட்டெடுத்துள்ளார்.
குறிப்பாக கல்வி சார்ந்து ஆசிரிய – மாணவ நல்லுறவு எப்படி இருக்க வேண்டும்? சிறுவர்களின் உளநலத்தை மேம்படுத்துவது எவ்வாறு? கட்டிளமைப் பருவப் பிள்ளைகளை கையாள்வது எப்படி? ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? போன்ற பல விடயங்களை விரிவான கட்டுரைகளாக எழுதியுள்ளதோடு இவை குறித்து பல்வேறு கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார்.
இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து பல மாணவர்களை நாடக நடிப்பில் திறமையானவர்களாக மாற்றியதுடன் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்றவராவார்.
சிறுகதைகள், நாவல்கள், உள சமூகக் கட்டுரைத் தொகுதிகள், சிறுவர் விஞ்ஞானப் புனைவுகள், புலப்பெயர்வு சார் புனைவுகள், பெண்ணிய உளவியல் சார் தொகுப்பு, விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள், பெற்றோரியம் என பல்வேறு உள்ளடக்கங்களில் நூல்களை எழுதியுள்ளார்.
கலாபூசணம் விருது, சாகித்திய இலக்கிய விருதுகள் உள்ளிட்ட பல விசேட விருதுகளையும் கௌரவப் பட்டங்களையும் பெற்றுள்ளார். இவரது கட்டுரைகள், சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, முரசொலி உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் ஜீவநதி, தாயகம், வளர் போன்ற பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


