இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 16ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், 350 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை இந்திய கிரிக்கெட் சபை இன்று அறிவித்தது.
இந்த 350 பேரில் 240 இந்தியர்களும் 110 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இலங்கை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அணிகள் நிரப்ப வேண்டிய 77 இடங்களுக்காக மொத்தமாக 237.55 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக 64.3 கோடி இந்திய ரூபாவை கையிருப்பில் வைத்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43.4 கோடி இந்திய ரூபாவை கையிருப்பில் வைத்துள்ளது.
அதேநேரம், ஐந்து முறை கிண்ணத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மிகக் குறைந்த தொகையான 2.75 கோடி இந்திய ரூபாவை மட்டுமே செலவிடக் கூடிய நிலையில் உள்ளது.
இந்தப் பட்டியல், வெளிநாட்டு வீரர்களான கிளென் மெக்ஸ்வெல் மற்றும் ஃபஃப் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.
இந்த ஏலத்தில், சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆகிய மூவரும் அதிகபட்ச அடிப்படை விலை பிரிவான 2 கோடி இந்திய ரூபாய் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இவர்களைத் தவிர, சகலதுறை வீரர் சரித் அசலங்க மற்றும் விக்கெட் காப்பாளர் குசல் பெரேரா ஆகியோர் ஒரு கோடி ரூபாய் பிரிவிலும், பெதும் நிஸ்ஸங்க, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் 75 இலட்சம் இந்திய ரூபாய் பிரிவிலும் உள்ளனர்.
அதேநேரம். தேசிய அணியில் இடம்பெறாத டிரவீன் மெத்யூ 30 இலட்சம் இந்திய ரூபாய் அடிப்படை விலையுடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.


