பேயை விரட்டுவதாக கூறி இளம்பெண் ஒருவரைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது.
பேயை விரட்டுவதாக தெரிவித்து அந்த பெண்ணின் கால்களை கட்டி, பீடி, மதுபானம் குடிக்க வற்புறுத்திக் கொடுமைப்படுத்தியுள்ளனர். மந்திரவாதி ஒருவர் பேயை விரட்டுவதற்காக சூனியம் வைக்கிறேன் என்ற பெயரில் இளம் பெண்ணை பல மணி நேரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளமை காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் மனநிலை மோசமடைந்த நிலையில், அவரது தந்தை காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மந்திரவாதி, பெண்ணின் கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் இரு வாரங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர், பெண்ணின் உடலில் இறந்த உறவினர்களின் தீய சக்திகள் உள்ளன. அதனால் அவற்றை விரட்ட வேண்டும் என்று கூறி இந்த விபரீத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான மூட நம்பிக்கைகளை நம்புவதால் பாரிய பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை.


