Thursday, January 9, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆங்கில புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி பின்வருமாறு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்துகள், இந்த ஆண்டு உங்கள் வாழ்கையில் புதிய உற்சாகத்தையும், புதிய மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! எங்கும் நலமே சூழட்டும் என பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மக்களுக்கு நம்பிக்கையையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். அனைத்து மக்களும் நிம்மதியான வாழ்க்கையை வாழும் சூழலை ஏற்படுத்த ஒன்றுபட்டு நிற்போம் என கூறியுள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில் நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத்திலும் நம் நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது.

ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

செல்வப்பெருந்தகை, வைகோ

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:- ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.:- தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழகத்தைப் பாதுகாக்க சூளுரைப்போம். தமிழக மக்களுக்கு, உலகுவாழ் தமிழர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்-முத்தரசன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர ஓர் புதிய பாதையை அமைக்கவும், அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்த இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம். அனைத்து தரப்பு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன்:- பெரும் நம்பிக்கையோடும், பெரு மகிழ்ச்சியோடும் வரும் புத்தாண்டை வரவேற்கிறோம். அதேநேரத்தில் கடந்து போகும் ஆண்டின் அனுபவத்தை பரிசீலித்து பயனுள்ள படிப்பினைகளை பெறுவது அவசியமாகும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.:- மலரும் புத்தாண்டான 2025-ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். ஜனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சாதி-மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும்; சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும்.

ஓ.பன்னீர்செல்வம்-கமல்ஹாசன்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மலரும் ஆங்கில புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வதாகும். நமது சிறந்த கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

சரத்குமார்

இதேபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. ரா.சரத்குமார், இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழக நிறுவனருமான பால் தினகரன், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி., வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் ஆ.மணி அரசன்,

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக ஜனதாதளத்தின் மாநில தலைவர் டி.ராஜகோபால், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல், தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,

தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டீன், முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.கே.தாஜூதீன், மறுமலர்ச்சி தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி வரவேற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் விதைத்திடும் வகையில் பிறக்கும் இப்புத்தாண்டு, மக்களை அனைத்து வழிகளிலும் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தீமைகளை விரட்டி, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும், குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

சோர்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும் வழங்கும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும்.

ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

மாற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கக் கூடிய 2025 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன… ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சியை, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்; ஏமாற்றங்களை முழுமையாக விரட்டியடிக்கும்.

நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும். 2025 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்…. அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்

மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருகும் ஆண்டாக, தடைகளைத் தகர்த்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments