விஜய் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்திருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திப்புக்கு பின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்
இந்நிலையில், ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
‘அனைவருக்கும் வணக்கம். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட கவர்னர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்,நன்றி, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.