கனடாவின் மெட்ரோ வான்கூவர் பகுதியில், ஆப்பிள் கைக்கடிகாரத்தில் உள்ள அவசர நிலை SOS (Emergency SOS) அம்சம், தொடர்ந்து போலி அலாரங்களை (False Alarms) ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இது குறித்து கனடாவின் கோக்விட்லாம் தேடல் மற்றும் மீட்புக் குழு கவலை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை, ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாகத் தவறான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து விரைந்து சென்றபோது, அது ஆப்பிள் கைக்கடிகாரத்தின் தவறான அலாரத்தால் உருவானதாகத் தெரியவந்தது.
அவசரநிலைகளில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருந்தாலும், தவறான அலாரங்களால் உண்மையான அவசர மீட்பு நடவடிக்கைகளில் தேவையான வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் கைக்கடிகாரங்களில் உள்ள இந்தத் தானியங்கி அழைப்பு அம்சத்தை விரும்பாத பயனர்கள், அமைப்புகளில் உள்ள ‘ஒட்டோ-கோல்’ அம்சத்தை முடக்குமாறும், பொத்தான்கள் தவறுதலாக அழுத்தப்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துமாறும் மீட்புக் குழு பொதுமக்களைக் கோரியுள்ளது.


