இன்று மகாளயபட்ச அமாவாசை. இன்றைய தினம் ஏன் காகத்திற்கு மட்டும் உணவளிக்க வேண்டும் என காஞ்சி மஹா பெரியவர் சொன்ன ஒரு விடயத்தை இங்கு காணலாம்.
ஒருவர் மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மக பெரியவர், ”தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். ‘மியாவ்’ என கத்தும் பூனையையும், ‘கிக்கி’ எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை. ஆனால், ‘கா’ எனக் கத்தும் இதை மட்டும் ‘காகம்’ என்றே அழைப்பது ஏன் தெரியுமா…? என்று கேட்டுள்ளார்.
அத்துடன், ‘கா’ என்றால் ‘காப்பாற்று’. அதாவது, காகத்திற்கு உணவிடும் போது, ‘கா… கா…’ என சத்தமிடுகிறோம் அல்லவா.. அப்போது நாம் நமது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது. அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற காகத்துடன் பகிர்ந்துண்ணும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா…? இல்லையே… முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம் என்று விளக்கமளித்துள்ளார்.
அதோடு, நாம் காகத்திற்கு உணவிடும் போது அது மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் ‘இருவருமே கடவுள்’ என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அதற்கு காரணம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆலமரம், அரச மரம் ஆகிய இரண்டும் சிறப்பானவை. பரம்பரையை அடையாளம் காட்டுவது ஆலமரம். அதனால் தான், ‘ஆல் போல தழைத்து வாழ வேண்டும்’ என மணமக்களை வாழ்த்துகின்றனர் என்றும், மரங்களின் அரசனான அரசமரம் மும்மூர்த்திகளின் அடையாளம். இந்த இரண்டையும் யாராவது விதைத்து பார்த்திருக்கிறீர்களா…என்று அந்த நபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, காகம் இடும் எச்சத்தின் மூலம் இந்த விதைகள் வளர்கின்றன. இந்த மரங்களுக்காகவே காகம் உயிர் வாழ்வது அவசியம். அதனால்தான் காகத்திற்கு உணவளிக்கிறோம். இந்த மரங்களை பார்க்கும் போது முன்னோரின் ஞாபகம் உங்களுக்கு வர வேண்டும் என்று காஞ்சி மஹா பெரியவர் தெரிவித்துள்ளார்.


