வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.
அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது.
இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும்.
இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்தோடு தொழிற்சாலைகளையும் மீள உருவாக்கி வருகின்றது.
எமது மாகாணத்துக்கு தேவையாக உள்ள வேலை வாய்ப்பும், வருமான மீட்டலும் இதனூடாக கிடைக்கப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


