மன்னாரின் சிறித்தோப்புவா கடற்கரையோரத்தில் (செப்டம்பர் 10) இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, 91 பறவைகள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
கடற்படையின் தகவலின்படி, இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை கண்டறிந்த கடற்படை, வடக்கு மத்திய கடற்படைத் தளபதி பிரிவின் கீழ் செயல்படும் பெசலை கடற்படை முகாமின் பணியாளர்களை கொண்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்போது, 72 புறாக்களும் 19 சண்டைக்கோழிகளும் அடங்கிய பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரும் பெசலையும் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், கைதானவர்கள், பறவைகள் மற்றும் படகு ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக பெசலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


