இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூர் பகுதியில் உலகப் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் லட்டு ஏலம் நடைபெற்றுள்ளது.
இதில் 21 கிலோ எடை கொண்ட இந்த பிரசாத லட்டு, சாதனையாக 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
‘அர்பன் குரூப்’ (Urban Group) நிறுவனத்தின் உரிமையாளரான சாமா பிரணீத் ரெட்டி என்பவர் இந்த லட்டை ஏலத்தில் வென்றெடுத்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு இந்த லட்டு 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு 4 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் கேட்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த லட்டை ஏலத்தில் எடுத்து வைப்பவர்களுக்கு வாழ்க்கையில் செல்வமும், மகிழ்ச்சியும், நன்மைகளும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதி அடுத்த ஆண்டு வழிபாட்டிற்கும், மீதித் தொகை பாலாப்பூர் பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
1994-ஆம் ஆண்டு முதன்முதலாக 450 ரூபாய்க்கு ஏலம் விடத் தொடங்கப்பட்ட இந்த பாலாப்பூர் லட்டு, அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏலத் தொகையில் புதிய உச்சங்களை தொட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


