Friday, November 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2026-2027 சிவனொளிபாத மலை பருவகாலம் டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பம்

2026-2027 சிவனொளிபாத மலை பருவகாலம் டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பம்

சிவனொளிபாத மலை எவருக்கும் சொந்தமானதல்ல எனவும், அந்தப் பகுதி முழுமையாகப் பொதுமக்களுக்கு உரித்தானது எனவும் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

 

2026-2027 சிவனொளிபாத மலை யாத்திரை பருவத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேற்று (18) பிற்பகல் நல்லதண்ணி கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே தேரர் இதனைக் குறிப்பிட்டார்.

 

நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாயக்க தேரர், நல்லதண்ணி பௌத்த நிலையத்திற்கு அருகிலிருந்து இரத்தினபுரி பலாபத்தல சிவனொளிபாத மலை தோரணை வரையிலான பாதை வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமானதல்ல எனச் சுட்டிக்காட்டினார்.

 

பருவமல்லாத காலங்களில் வருகைதரும் சில உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலையின் சுற்றாடலுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதாகவும், வனஜீவராசிகள் திணைக்களம் பணம் அறவிட்டு அனுமதிச்சீட்டுகளை வழங்குவதால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

 

சிவனொளிபாத மலை புனிதத் தலமாகப் பெயரிட்டு, பாதையின் இரு மருங்கிலும் தலா 20 அடி வீதம் அமையும் வகையில் வர்த்தமானியில் வெளியிடுமாறு பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தபோதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

 

இம்முறை யாத்திரை பருவம் நிறைவடைவதற்கு முன்னர்சிவனொளிபாத மலையை புனிதத் தலமாகவும், இந்தப் பாதையை சிவனொளிபாத மலை பாதை’ எனவும் பெயரிடுவதற்குத் தலையிடுமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராய்ச்சியிடம் தேரர் கோரிக்கை விடுத்தார்.

 

‘டித்வா’ சூறாவளி காரணமாக ஹட்டன் பாதையின் மகாகிரிதம்ப பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் கடந்த நாட்களில் பெய்த மழையினால் இதிகட்டு பஹன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு ஆகியவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாகத் தலையிட்டுப் பாதுகாப்புப் பிரிவினரை ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்ததை நாயக்க தேரர் நினைவுகூர்ந்தார்.

 

மேலும், யாத்திரிகர்களுக்கும் மலை உச்சிக்கும் இலவசமாகக் குடிநீரை வழங்குவதற்கு ஜனாதிபதி தலையிட்டமையும் தேரரின் பாராட்டைப் பெற்றது.

 

இதேவேளை, யாத்திரை பருவம் ஆரம்பமாவதற்கு முன்னர் நல்லதண்ணி பாதையில் காணப்படும் குளவிக் கூடுகளை அகற்றுவதற்கும், மண்சரிவு காரணமாகக் கீழே அடித்து வரப்பட்ட கற்கள் மற்றும் மண்ணை அகற்றி சீத்தகங்குல ஆற்றை யாத்திரிகர்கள் நீராடுவதற்குப் பொருத்தமான வகையில் தயார்படுத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரை பருவம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி உந்துவப் பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமாகவுள்ளது.

 

டிசம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் கல்ப்பொத்தாவெல ரஜமகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சதாதுக பேழை, சமன் தேவ சிலைகள், தேவ ஆபரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வெளிப்புறமாக எழுந்தருளச் செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

டிசம்பர் 22 ஆம் திகதி பெல்மதுளை ஸ்ரீ பாத ரஜமகா விகாரையிலிருந்து பலாபத்தல, எரத்ன, இரத்தினபுரி, அவிசாவளை மற்றும் ஹட்டன் ஆகிய 04 பாதைகள் வழியாக 04 ஊர்வலங்கள் மூலம் அவை சிவனொளிபாத மலை உச்சிக்கு எழுந்தருளச் செய்யப்படவுள்ளன.

 

டிசம்பர் 23 ஆம் திகதி அதிகாலை மலை உச்சியில் பண்டைய சம்பிரதாய வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், யாத்திரை பருவம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

சுற்றாடலைப் பாதுகாத்து, சிவனொளிபாத மலையை புனிதத் தலமாகக் கருதி யாத்திரைக்கு வருகை தருமாறு ஸ்ரீ பாதஸ்தானாதிபதி நாயக்க தேரர் அனைத்து யாத்திரிகர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments