30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட குறித்த சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் என தெரியவந்துள்ளது.
இவர் இந்த சிகரெட் தொகுதியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகளைக் கொண்ட 102 சிகரெட் பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்ணை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


