Monday, November 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மறைந்த எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியை விபரம் வௌியானது

மறைந்த எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியை விபரம் வௌியானது

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது.

அன்னாரின் உடல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மதியம் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் நேற்று (14) இரவு காலமானார்.

நீண்ட காலமாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு 11.35 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நலகுறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையிலேயே ,நேற்றைய தினம் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாக இருந்து,  தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து வந்த கால பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் பொறுப்பேற்று, மக்கள் சேவையை முன்னெடுத்து வந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்து வந்தார்.

அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் தமது இரங்கலை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments