சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பினர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
மக்காவை நோக்கி வந்த ட்ரோனை, அது மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சவூதி தரப்பு கூறியுள்ளது.
மக்காவை நோக்கி ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புனித நகரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் முயற்சிகளையும் சவூதி கண்டித்துள்ளது.
மேலும், புனித நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என சவூதி பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்காவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டாவது தாக்குதல் முயற்சி இதுவென சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் ஆரம்பித்த பின்னர் ஹவுதி அமைப்பினர்கள் சவூதி அரேபியாவை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது மக்காவை இலக்காகக் கொண்டதாக தெரிவிக்கப்படும் இந்த தாக்குதல் முயற்சி பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


