Thursday, November 19, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பிறந்த சில நொடிகளில் பச்சிளம் குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்

பிறந்த சில நொடிகளில் பச்சிளம் குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை மறைப்பதற்காகப் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவருக்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கலாஜி என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தத்தமது வாழ்க்கைத் துணையிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கிடையிலான தொடர்பு காதல் உறவாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் ரகசியமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாகக் கர்ப்பம்

இந்த உறவின் மூலம் குறித்த பெண் ஏற்கனவே இரண்டு முறை கர்ப்பமடைந்ததாகவும், இருவரும் இணைந்து அந்தக் கர்ப்பங்களைக் கலைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மூன்றாவது முறையாகக் கர்ப்பமடைந்த பெண், கர்ப்பத்தைத் தனது குடும்பத்தினரிடமிருந்து மறைத்து வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்திய போதிலும் அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிறந்த குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு

கடந்த நவம்பர் 14ஆம் திகதி நள்ளிரவு குறித்த பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய அவர், கிராமத்தின் ஒதுக்குப்புறமான மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு காதலன் கலாஜியின் முன்னிலையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். குழந்தையின் அழுகுரல் மூலம் தங்களது ரகசிய உறவு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், குழந்தையின் கழுத்தை நெரித்து அருகிலிருந்த வடிகாலில் வீசியதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழப்பு

மறுநாள் அவ்வழியாகச் சென்றவர்கள் வடிகாலில் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு மீட்டு காந்திநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை உயிரிழந்துள்ளது. பிரேதப் பரிசோதனையில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த தேகாம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பெண்ணையும் அவரது காதலனையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments