பொலிஸ் வேடத்தில் அச்சுறுத்தி பண மோசடி செய்யும் குற்ற வலையமைப்பு செயலில் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தாமதிக்காமல் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுத்தியுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில்,
நிதி குற்றவாளிகள் Telegram / WhatsApp போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தங்களை இலங்கைப் பொலிஸின் அதிகாரிகளாக அறிமுகப்படுத்தி, பொதுமக்களை மிரட்டி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தினமும் பதிவாகி வருகின்றன.
பல துறைகளில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் மதகுருமார்களையும் இலக்காக கொண்டு இக்குற்றவாளிகள் மோசடிகளை அதிகரித்துள்ளனர்.
மக்களை அச்சுறுத்துவதற்காக இக்குற்றவாளிகள் பொதுவாக பயன்படுத்தும் முறைகள்:
• முதலில் இலங்கை மத்திய வங்கி, குற்றவியல் விசாரணைத் திணைக்களம் அல்லது பொலிஸ் விசாரணை பிரிவு என கூறி உங்கள் அலுவலக நிலையான தொலைபேசி அல்லது கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
• பின்னர் “உங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது / உங்கள் வங்கி கணக்கு பணமோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது / உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறி அச்சுறுத்துகின்றனர்.
• அதன் பின்னர் விசாரணை ரகசியமானது எனக் கூறி, உங்களை காப்பாற்ற பணம் அல்லது பிற கோரிக்கைகளை முன்வைத்து, பொலிஸ் உத்தியோகப்பூர்வ இலட்சினை அல்லது அதிகாரியின் புகைப்படத்தை அனுப்பி நம்பிக்கையை பெற முயல்கின்றனர்.
• “Verification” அல்லது “கணக்கு முடக்கம் நீக்கம்” எனக் கூறி OTP எண்களைப் பெற்று வங்கி கணக்குகளை அணுகுகின்றனர்.
• மேலும் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்ற அல்லது USDT போன்ற கிரிப்டோகரன்சி வாங்கி அனுப்புமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
இவ்வாறான மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க:
• எந்த அரசு அல்லது தனியார் நிறுவமும் தொலைபேசி/WhatsApp மூலம் தேசிய அடையாள எண், வங்கி விவரங்கள், கடவுச்சொல் அல்லது OTP கேட்காது.
• “உங்கள் கணக்கு ஆபத்தில் உள்ளது”, “உங்கள் மீது வழக்கு தொடரப்படும்” போன்ற வார்த்தைகளால் பயமுறுத்தினால் ஏமாற வேண்டாம்.
• சந்தேகமான நபர்களுக்கு பணம் அனுப்புவதற்கு முன் உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்யுங்கள்.
• இலங்கைப் பொலிஸ், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் அல்லது மத்திய வங்கி எப்போதும் WhatsApp மூலம் விசாரணை நடத்தாது அல்லது பணம் கோராது.
• போலியான ஆவணங்கள்/இலட்சினைகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும்.
• சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள எண்கள் மூலம் உறுதிப்படுத்துங்கள்.
• தெரியாத லிங்குகள் அல்லது QR குறியீடுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இவ்வாறான குற்றங்களை தடுப்பதற்காக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பொலிஸ் எந்த விசாரணைக்கும் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
📞 தொடர்பு எண்கள்:
• கணினி குற்ற விசாரணை பிரிவு கண்காணிப்பு அதிகாரிகள்: 071 8592918 / 071 8591765
• கணினி குற்ற விசாரணை பிரிவு: 011 2300756
• தேவையானால் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


