Tuesday, June 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதித்துறையில் அரசு தலையீடு - மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

நீதித்துறையில் அரசு தலையீடு – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கும், அதனை அழிப்பதற்கும் தற்போதைய அரசு வெட்கமற்ற முறையில் முயற்சிப்பதை நாம் காண்கின்றோம்.

முன்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் சட்டத்தின் ஆட்சி இவ்வாறுதான் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது தற்போதைய ஜனாதிபதி ஊழல், ஒழிப்புக் குழுவின் முக்கிய பதவியை வகித்ததுடன், தற்போதைய பொலிஸ் அமைச்சர் அதன் செயலாளராகவும், ஷானி அபேசேகர சி.ஐ.டியின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு சட்டத்தை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதே குழுவினர் மீண்டும் ஒன்றிணைந்து சட்டத்தை வளைக்க முற்படுகின்றனர்.

அரசைச் சேர்ந்த நீதி அமைச்சர் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டேஇ ‘தங்கள் அரசு ஆட்சியில் இல்லாவிட்டால் இவ்வாறான தீர்ப்பு கிடைத்திருக்காது’ என்று பகிரங்கமாகக் கூறுகின்றார். மறுபுறம் ஜனாதிபதி மே தினப் பேரணியில் உரையாற்றும் போது ‘நாள்களைக் கணக்கிட்டு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்’ என எச்சரிக்கின்றார். இவை ஒரு ஜனநாயக சமூகத்துக்கு மிக மோசமான முன்னுதாரணங்கள் என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நீதிபதிகளின் கௌரவத்தைப் பாதித்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றன.

தற்போது உயர் நீதிமன்றத்தில் 4 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த நியமனங்களைச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ள போதிலும், இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதன் மூலம் அனைத்து நீதிபதிகளையும் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கவே அரசு முயற்சிக்கின்றது – என்றார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments