Sunday, October 4, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்தோல்விக்காக தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் - லிட்டன் தாஸ்

தோல்விக்காக தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் – லிட்டன் தாஸ்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்ததற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் எந்த அர்த்தமும் இல்லை என அணியின் தலைவர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தத் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த லிட்டன் தாஸ், போட்டியின் முதல் 8 ஓவர்களில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

அதன் பின்னர் இலங்கை வீரர் தரிந்து ரத்னாயக்க கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்ததாகவும், அவரை கட்டுப்படுத்த தங்களது பந்துவீச்சாளர்களால் முடியவில்லை என்றும் கூறினார்.

தங்களது துடுப்பாட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தனது துடுப்பாட்டமும் சிறப்பாக அமையவில்லை என்றும் தெரிவித்தார்.

இரண்டு போட்டிகளிலும் தன்னால் ஓட்டங்களைக் குவிக்க முடியாததால் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தான் கருதவில்லை எனவும் லிட்டன் தாஸ் கூறினார்.

கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்றும், ஒரு நாள் சிறப்பாக அமையலாம், மற்றொரு நாள் மோசமானதாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய இலக்கை நோக்கி திட்டமிட்டு அதை அடைய முடியாதபோது ஏமாற்றமடைவது இயல்பானது என்றாலும், கடந்த காலங்களில் ஒரு அணியாக பல சாதனைகளைப் படைத்துள்ளதுடன், எதிர்காலத்திலும் சாதிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி பதக்கம் வெல்லாதது இதுவே முதல் முறையாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments