Wednesday, June 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பருவமழையின் 2ஆம் சுற்று ஆரம்பம்: வானிலையில் ஏற்படும் மாற்றம்

பருவமழையின் 2ஆம் சுற்று ஆரம்பம்: வானிலையில் ஏற்படும் மாற்றம்

தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியரும், கலைப்பீட பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 17.06.2026 வரை இலங்கையின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தளை,குருநாகல், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை தொடர்பில் அவர் (11.06.2026 வியாழக்கிழமை இரவு 8.45 மணி) வெளியிட்டுள்ள எதிர்வுகூறலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏற்கனவே இப்பகுதிகளில் கிடைத்த கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வான் பாயத் தொடங்கியுள்ளன. களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை போன்ற ஆறுகள் அவற்றின் முழுக்கொள்ளளவைத் தாங்கி பாய்கின்றன.

எனவே அடுத்து வரும் நாட்களில் கிடைக்கவிருக்கும் கனமழை பல, ஆறுகளை அண்மித்த தாழநிலப் பகுதிகளிலும், நீர்த்தேக்கங்களின் வான் பாயும் பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

அத்தோடு கடந்த சில நாட்களாக மழை கிடைத்து வருவதாலும் மேலும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனாலும் கேகாலை, நுவரெலியா, குருநாகல், கண்டி, மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்படக்கூடும்.

எனவே நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி,கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, குருநாகல் மாவட்ட மக்கள் அடுத்த சில நாட்களுக்கு மிக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ந்து கனமழை கிடைத்து வருகிறது. மவுசாகலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, புதிய லக்சபான, கலுகல, விமலசுரேந்திரா, மேல் கொத்மலை, காசல்றீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

மேலும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இம்மாவட்ட மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 16.06.2026 வரை வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை ( பரவலாக அல்லாமல் தனித் தனிப் பகுதிகளாக)மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக எதிர்வரும் 12.06.2026 அன்று கிழக்கு மாகாணணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அன்றைய தினம் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் தயவு செய்து கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments