லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் தாக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 புள்ளிப்பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் வாய்ப்பு மேலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.. ஆனால், இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதி அல்ல.
ஆப்கானிஸ்தான் WTCயில் பங்கேற்கும் ஒன்பது அணிகளில் ஒன்றல்ல என்பதே இதற்குக் காரணம்.
எனவே, இந்த ஒரு போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி WTC புள்ளிப்பட்டியலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நடப்பு 2025-27 WTC சுழற்சியில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன் 48.15% புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (87.50%), தென்னாப்பிரிக்கா (75.00%), இலங்கை (66.67%), நியூசிலாந்து (58.33%) மற்றும் பங்களாதேஷ் (58.33%) ஆகிய அணிகள் இந்தியாவுக்கு முன்னிலையில் உள்ளன.
இங்கிலாந்தின் வெற்றிக்குப் பின் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இலங்கை (வெளிநாடு), நியூசிலாந்து (வெளிநாடு) மற்றும் ஆஸ்திரேலியா (உள்ளூர்) ஆகிய பலமான அணிகளுக்கு எதிரான இந்த 9 போட்டிகளில், இந்திய அணி குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற மிகக் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.
60-65% புள்ளிகள் பெற்றாலே பொதுவாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்றாலும், தற்போதைய நிலையில் இந்தியா 130 புள்ளிகள் (60% PCT) எட்டினால்கூட போதுமானதாக இருக்காது.
இதனால் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்குச் சரியான அணியைத் தேர்வு செய்யும் நெருக்கடி எழுந்துள்ளது.
எஞ்சியுள்ள ஒன்பது WTC போட்டிகள்: இலங்கைக்கு எதிராக வெளியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் (ஆகஸ்ட் 2026), நியூசிலாந்துக்கு எதிராக வெளியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் (அக்டோபர் 2026), மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் (ஜனவரி 2027) ஆகியன அடங்கும். இந்தத் தொடர்கள் ஒவ்வொன்றும் இந்தியாவின் WTC பயணத்தில் மிக முக்கியமானவையாகும்.


