அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான Champions படையணி திட்டத்திற்கு 400 உத்தியோகத்தர்களை டிஜிட்டல் வெற்றியாளர்களாக உள்வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டளவில் 12% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவன கட்டமைப்பைத் தரமானதும், செயல்திறன் மிக்கதுமானதாக மாற்றும் நோக்கில், அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக மக்கள் சேவை மேம்பாட்டிற்கான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பை அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நிறைவேற்று அதிகாரிகள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி கொழும்பு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன (ICTA) வளாகத்தில் நடைபெற்றது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்படுத்துவதற்காக அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிலிருந்து “Champions படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய திறமையையும் தகுதியையும் கொண்ட உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்களை அனுப்புமாறு நிறுவனத் தலைவர்களுக்கு இந்நிகழ்வில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவரும், டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசகருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இங்கு கருத்துத் தெரிவிக்கையில், தற்போது 3% அளவில் காணப்படும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டளவில் 12% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரம் அபிவிருத்தி என்பது தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவற்றின் செயல்திறன், தரம் மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளிலும் டிஜிட்டல் பொருளாதாரம் விரிவடைந்துள்ள விதத்தை எடுத்துக்காட்டிய கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை என்பது மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்டார்.
எனினும், இந்தியா தற்போது டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துவருவதாகவும், அதனுடன் இணைந்து இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் குறிப்பிடத்தக்க நிலைக்கு உயர்த்துவதே அரசின் பிரதான இலக்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடாகும் என்றும், அதற்கு அமைய, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிச் சேவைகள் இணையவழியில் நடைபெறுவதைப் போலவே, அரச நிறுவனங்களுக்கு இடையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் தொழில்நுட்ப மாற்றத்திற்காக, அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் போன்று, நாட்டின் அனைத்துக் பிரஜைகளினதும் பங்களிப்பும் மிகவும் அவசியமானது எனக் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கலாநிதி ரனில் பீரிஸ், PIC-NET திட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளித்தார்.
எதிர்காலத்தில் நாட்டு மக்கள் தங்களது இல்லங்களில் இருந்தபடியே கடவுச்சீட்டு விண்ணப்பித்தல், அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை முழுமையாக இணையவழியில் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க முடியும் எனத் தெரிவித்த அவர், இதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரே தகவலை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படாத முறைமை ஒன்றை உருவாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.


