சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைந்து சிறைச்சாலை உடையை அணிவித்த சிறை அதிகாரிகளின் முடிவைச் செல்லுபடியற்றதாக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதி அமைச்சின் செயலாளர், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட பலர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 9ஆம் உறுப்புரையானது பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான பொறுப்பை அரசுக்கு வழங்குவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அவரது காவி உடை அகற்றப்பட்டு சிறைச்சாலை உடையுடன் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றிய சிறை அதிகாரிகளின் நடவடிக்கை சிறைச்சாலை விதிமுறைகளுக்கும் பௌத்த ஒழுக்க விதிகளுக்கும் முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே, காவி உடையை அகற்றுவதற்கான முடிவைச் செல்லுபடியற்றதாக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளதுடன், அவ்வாறான நடவடிக்கைக்கு வழிவகுக்கும் சிறைச்சாலை விதிமுறைகள் அல்லது சுற்றறிக்கைகளையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரியுள்ளார்.
மேலும், ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவையும் மனுதாரர் கோரியுள்ளார்.
திணியாவல பாலித்த தேரரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


