நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசேட இன்று (07) கூற்றொன்றை முன்வைத்து அவர் கருத்து வெளியிட்டார்.
சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது குறிப்பிட்டிருந்தார். எனவே, தற்போதைய அரசாங்கமும் இந்தச் சம்பவத்திற்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இன்றைய சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் ‘முறைமை மாற்றம்’ முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது என்றார்.
நாட்டிற்குள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா என்றும், சிறைச்சாலைகளுக்குள் மனிதாபிமான ரீதியிலான நிர்வாகத்தை ஏன் முன்னெடுக்க முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டு மக்கள் இதனை அவதானித்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


