Tuesday, July 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிறந்த பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் - ஜனாதிபதி

சிறந்த பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காக தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டிற்குள் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் அதே அவதானத்தை, பொதுப் போக்குவரத்துச் சேவையின் முன்னேற்றத்திற்காகவும் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்குத் தொடர்புடையதாக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் குறித்து நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

புதிய திட்டமொன்றின் ஊடாக பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

பழைய பேருந்துகளை படிப்படியாகப் போக்குவரத்தில் இருந்து நீக்கி, புதிய பேருந்துகளைச் சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்காக ‘மெட்ரோ பேருந்துகள்’ போன்ற வசதிகளைக் கொண்ட பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வசதியான போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான அடுக்குமாடி குடியிருப்பு நிர்மாணத் திட்டங்கள், நகர்ப்புற கழிவு முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் CITY BRANDING திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம், இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து வரவுசெலவுத் திட்ட நிதியை ஒதுக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் இறுதிப் பெறுபேறு குறித்து சரியான தெளிவில்லாமல் அத்தகைய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, வலுசக்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளருமான ரஸல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சு, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments