Tuesday, July 14, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உலக சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ள கச்சாய் எண்ணெய் விலை

உலக சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ள கச்சாய் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% இற்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.29 டொலர்கள் அல்லது 9.59% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 83.30 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 6.73 டொலர்கள் அல்லது 9.42% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 78.14 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வானது, ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த ஒருநாள் டொலர் வளர்ச்சியாகவும், ஜூன் 12 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த விலையாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுடன் மீண்டும் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவினால் மீண்டும் கடற்படை முற்றுகை விதிக்கப்படும் என்றும், ஹோர்முஸ் நீரிணை ஊடாக கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 20% கட்டணம் அறவிடப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதில் வொஷிங்டன் தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஈரானின் அனுமதியின்றி நீரிணையைக் கடக்க அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதற்குத் தான் எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் கப்பல் போக்குவரத்து முகவாண்மை, ட்ரம்பின் முன்மொழிவுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ளதுடன், நீரிணைகளைக் கடந்து செல்வதற்கு கட்டாய வரிகளை அறிமுகப்படுத்துவதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்னர், உலகளாவிய தினசரி எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்பட்டது.

ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் போது கப்பல் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருந்த போதிலும், இந்தத் பதற்றநிலை அதிகரிப்புடன் அது மீண்டும் மந்தமடைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments