மூன்று பொஸ்பேட் நிறுவனங்களிடம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு இன்று (20) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில், பதில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில் சாமர சம்பத் தசநாயக்கவும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் கைது செய்யப்பட்டனர்.
சாமர சம்பத் தசநாயக்க, 2022 செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரை ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், மூன்று தனியார் நிறுவனங்களுக்கு பொஸ்பேட் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக சட்ட நடைமுறைகளை மீறி 8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பணம் அவரது முன்னாள் செயலாளரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (20) சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


